“தம்பியின் ஆட்டத்தை கண்டு மிரண்ட அண்ணன்..” – சிலாகித்து போட்ட ட்வீட்!
இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிய இர்பான் பதானுக்கு ட்வீட் செய்துள்ளார் அவரது அண்ணனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான்.
சாலைவிழிப்புணர்வுக்கான உலக தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. அதையடுத்து இலங்கை லெஜெண்ட்ஸ் அணியுடனான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய முனாப் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் போட்டியில் அதிரடி காட்டிய சச்சின், சேவாக், மற்றும் யுவ்ராஜ் ஆகிய வீரர்கள் இம்முறை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர். சற்று நிலைத்து ஆடி வந்த முகமது கைப் 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
இந்நிலையில், இந்திய அணிக்கு தோல்வி உறுதி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலைத்து நின்று ஆடிய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு 57 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார். இவர் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசியது பழைய நினைவுகளை கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.
தம்பியின் இந்த அதிரடியான ஆட்டத்தை கண்டு வியந்ததாக இர்பான் பதானின் அண்ணனும் முன்னாள் இந்திய வீரருமான யூசுப் பதான் ட்வீட் செய்திருந்தார்.
“இக்கட்டான சூழலில் சிறப்பாக ஆடிய இர்பான் பதான். பேட்டிங் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தல். சிறப்பான ஆல்ரவுண்டு செயல்பாடு” என குறிப்பிட்டார்.
What a knock under pressure @IrfanPathan !!! Loved watching your batting, especially those sixes coming off your bat… Also, well done with the ball… Brilliant all-round performance.. ?? pic.twitter.com/StgXPyQZk5
— Yusuf Pathan (@iamyusufpathan) March 10, 2020