இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான சுதீப் தியாகி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சுதீப் தியாகி (33) கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர். பின்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். மொத்தம் 4 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சுதீப் தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஆனால் 41 உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் சுதீப் தியாகி. உத்தரப் பிரதேசம் மாநில ரஞ்சி அணியிலும் இடம்பெற்றார். உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதீப் தியாகியை கடந்த 2009ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணியை தொடர்ந்து ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடியுள்ள சுதீப் தியாகிக்கு, கடந்த பல வருடங்களாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அனைத்து வகையான போட்டியிலிருந்தும் சுதீப் தியாகி ஓய்வுப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் “தோனி தலைமையிலான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முகமது கைஃப், ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கும் நன்றி. இந்த முடிவை மேற்கொண்டது கடினமானதுதான். ஆனால் வாழ்க்கை அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும்” என்றார் சுதீப் தியாகி.

மேலும் “ஒவ்வொரு வீரருக்கும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். என்னுடைய அந்த விருப்பம் நிறைவடைந்துவிட்டது” என தெரிவித்துள்ளார் சுதீப் தியாகி.