சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த ஐபிஎல் சீசனில் சில பிரச்சினை காரணமாக விளையாடவில்லை. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் இருந்தது. ஆனால் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மீண்டும் அணியுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சுரேஷ் ரெய்னா பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இவர் தனக்கு பிடித்த இந்திய இளம் வீரர்களை பற்றி பேசியிருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத் தொடரில் இந்திய இளம் வீரர்கள் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், சர்துல் தாகூர், சைனி ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் இவர்களை அனைவரும் பாராட்டி வந்தனர்.
சுரேஷ் ரெய்னா கூறுகையில் “இந்திய இளம் வீரர்களில் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தான் எனக்கு பிடித்த வீரர்கள். இவர்கள் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். தற்போது முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் பேட்டிங்கில் இரண்டு அரைசதம் அடித்து தனது திறமையை நிறுபித்தார்.

இவரைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் இரு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல், ஒருநாள் தொடரிலும் இரண்டு அரைசதங்களை அடித்து இருக்கிறார். ரிஷப் பண்ட் முன்பெல்லாம் உடற்தகுதி காரணமாக சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் தற்போது இவர் சிறந்த உடற்தகுதி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். கோலி இவரை புரிந்துக்கொண்டு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். பண்ட் இன்னும் 10-15 ஆண்டுகள் விளையாடுவார்” என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
