2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் இடத்தில் தோனி களமிறங்கியதற்கு இது தான் காரணம்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்
2011 உலகக்கோப்பை இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோருக்கு முன்பாகவே தோனி இறங்கியது பற்றி சுரேஷ் ரெய்னா மனம்திறந்து பேசியுள்ளார்.
விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனிடம் கேப்டன் தோனி, தான் முன்னால் களமிறங்கப் போவதாக தெரிவித்தார். அதாவது இலங்கையின் பெரிய ஸ்பின்னர் முத்தையா முரளிதரனை தன்னால் சிறப்பாகக் கையாள முடியும் என்று கூறி தோனி இறங்கியதாக ரெய்னா குறிப்ப்பிட்டுள்ளார்.
“தோனியின் உடல் மொழியைப் பார்த்த போது அவர் நிச்சயம் உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்றே எனக்குத் தோன்றியது. 91 ரன்கள் எடுத்த தோனி, பார்மில் இருக்கும் யுவராஜ் சிங்குக்கு முன்பாகக் களமிறங்கினார். அது ஒரு பெரிய முடிவு, ஆனால் தோனி பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனிடம் ஏற்கெனவே தான் முரளிதரனை நன்றாக ஆடுவேன் என்று கூறினார். அதனால் முன்னால் களமிறங்கினார். எனக்கு இது தெளிவாக நினைவிருக்கிறது.
நாங்கள் என்ன முடிவெடுத்தாலும் அது நமக்குச் சாதகமாகவே உள்ளது. அனைவரும் பேட்டிங் பற்றியே பேசினர், ஆனால் ஜாகீர் கான் பவுலிங்கில் நம் சச்சின் டெண்டுல்கர் ஆவார் , எப்போது வீசினாலும் விக்கெட் எடுத்துக் கொடுப்பார். யுவராஜ் சிங் பெரிய பங்களிப்பாக பவுலிங்கில் விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் ரன்களையும் எடுத்து அசத்தினார்.
இலங்கை அணி நல்ல சவாலான் இலக்கை நிர்ணயித்தாலும் ஓய்வறையில் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். ஒருவர் ஷவரில் இருந்தார், ஒருவர் ஐஸ் குளியல் போட்டார், ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், ஆனால் அனைவரும் வெற்றியையே யோசித்துக் கொண்டிருந்தோம். யாரும் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. ஆனால் சிந்தனை கோப்பை மீதுதான்” என்றார் ரெய்னா.