நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை முறைத்து பார்த்தது ஏன் என்ற காரணத்தை சூர்யகுமார் யாதவ் ஓபனாக தெரிவித்துள்ளார்.
மற்ற தொடர்களை விட இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரிதாக சுவாரஸ்யங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒரு சில போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு சில வீரர்கள் மைதானங்களில் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டதும், வம்பிழுத்து கொண்டதும் ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சுவாரஸ்யத்தை கொடுத்தது.
அதில் குறிப்பாக இந்திய அணியில் இந்த முறையும் தேர்வு செய்யப்படாத சூர்யகுமார் யாதவ், பெங்களூர் அணியுடனான கடைசி போட்டியின் போது பெங்களூர் அணியை தனி ஒருவனாக வதம் செய்தது மட்டுமல்லாமல், அதே போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனான கோஹ்லியை நேருக்கு நேர் நின்று முறைத்தது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது.

சிறப்பாக விளையாடி வரும் பொழுதிலும் தன்னை அணியில் எடுக்காததால் தான் சூர்யகுமார் யாதவ், கோஹ்லி மீதான தனது கடுப்பை வெளிப்படுத்தினார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர், ஆனால் இது குறித்து விராட் கோஹ்லியோ, சூர்யகுமார் யாதவோ வாய் திறக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது உண்மையில் என்ன நடந்தது என்பதை சூர்யகுமார் யாதவே ஓபனாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “அந்தப் போட்டியில் ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருந்தேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி விடுவோம். எனவே ரன்கள் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்” என்றார்.

மேலும் “விராட் கோலியை முறைத்த அந்தச் சம்பவம் இருவர் தரப்பிலும் இயல்பாக நடைபெற்றது. நீண்ட நாளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் கோலியை பெரிய ஊக்கமாகக் கருதுகிறேன். அவருடைய உற்சாகம், ஆதிக்கம் செலுத்தும் பாங்கு என எல்லாவற்றையும் ஆடுகளத்தில் காண முடியும், அது எந்த வகை கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும். ஆட்டம் முடிந்த பிறகு அச்சம்பவத்தைக் குறிப்பிட்டு இருவரும் சிரித்துக்கொண்டோம். அந்த ஆட்டத்தில் நான் நன்றாக விளையாடியதற்காக கோலி என்னை வாழ்த்தினார்” என்றார் சூர்யகுமார் யாதவ்.