நேற்று ஆந்திரா.., இன்று கேரளம்… சொல்லி அடிக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் !!

சையத் முஸ்தாக் அலி டிராபியில் கேரள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தமிழக அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.

இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

இதில் தெற்கு பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணியை விஜய் சங்கர் என்னும் இளம் வீரர் கேப்டனாக இருந்து வழிநடத்தி வருகிறார்.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தமிழக அணி ஆந்திராவை எதிர்கொண்டது.

இதில் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்து கைகொடுத்ததன் மூலம் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Tamil Nadu’s Dinesh Karthik en route to his 28-ball 57 against Andhra at Visakhapatnam

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் தமிழக அணி கேரளாவை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற கேரளா அணி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது

இதையடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு வாஷிங்டன் சுந்தர் (30), பாபா அபர்ஜீத் (34), ஜெகதீசன் (35) ஆகியோர் ஓரளவு கைகொடுத்தனர். அடுத்ததாக வந்த  தினேஷ் கார்த்திக் 38 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர் என நேற்றை போல் இன்றும் ஒரு அரைசதம் அடித்து 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தமிழக அணி 184 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய கேரளா அணியை தமிழக வீரர் விக்னேஷ் தனது வேகத்தில் நிலைகுலைய வைத்தார்.

விக்னேஷின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சஞ்சு சாம்சன் (2), விஷ்ணு விநோத் (1), பிரேம் (4), சச்சின் பேபி (51), சல்மான் நிசார் (38)  என அடுத்தடுத்து வெளியேறினர். விக்னேஷின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறிய கேரள அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள தமிழக அணி, சையத் முஸ்தாக் அலி தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

வெற்றிப்பாதையில் கம்பீரமாக பயணிக்கும்  தமிழக அணி அடுத்ததாக கோவா அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த தொடரில் மட்டுமல்லாமல் அனைத்து உள்ளூர் தொடரில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் இந்திய அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.