பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வங்கதேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டி,20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், பப்புவா நியூ கினியா அணியும் மோதின.
அல் அமீரத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் மஹ்மதுல்லா 50 ரன்களும், சீனியர் வீரர் ஷாகிப் அல் ஹசன் 46 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பப்புவா கெனியா அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் விக்கெட் கீப்பரான கிப்லின் தோரிகா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்த போதிலும், மறுமுனையில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 19.3வது ஓவரில் 97 ரன்கள் மட்டும் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பப்புவா கெனியா அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியும் அடைந்தது.
வங்கதேச அணியில் அதிபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் சைபுதீன் மற்றும் தஸ்கின் அஹமத் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர்.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி தோல்வியடைந்திருந்தாலும், அடுத்ததாக நடைபெற்ற ஓமன் மற்றும் பப்புவா கெனியா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அடுத்த சுற்றான க்ரூப் 12 சுற்றுக்கும் வங்கதேச அண் தகுதி பெற்றுள்ளது.