சிவம் துபே இல்லை… இவரால் மட்டுமே அசால்டா 15 பந்துகளில் போட்டியை மாற்ற முடியும்; யுவராஜ் சிங் நம்பிக்கை
எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவின் பங்கு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் துவங்க உள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் சொதப்பிய இந்திய அணி இந்த தொடரிலாவது சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதே போன்று உலகக்கோப்பை தொடருக்கான தங்களது இந்திய அணியையும் தேர்வு செய்து அறிவிக்கும் முன்னாள் வீரர்கள், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரும், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான விளம்பர தூதுவருமான யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், “டி.20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும். சூர்யகுமார் யாதவால் வெறும் 15 பந்துகளில் போட்டியை மொத்தமாக மாற்றி கொடுக்க முடியும் என்பதால் அவர் இந்திய அணியின் துருப்பு சீட்டாகவும் இருப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.