ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியை பரிதாபமாக தோல்வியை தழுவி அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகிய இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்த வருடத்தில் அதிக t20 போட்டிகளில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி என்ற மகத்தான சாதனை படைத்து பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளியது.
இந்த சாதனையை தொடர்ந்து ஐசிசி தரவரிசை பட்டியலில் 268 புள்ளிகள் பெற்று, t20 ஐசிசி தரவரிசைக்கான சிறந்த அணி என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது, இங்கிலாந்து அணி ஏழு புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணி 258 புள்ளிகள் பெற்று இடம்பெற்றுள்ளனர். இதில் பாகிஸ்தான் அணி லாகூரில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடரை கைப்பற்றிவிட்டால் நிச்சயம் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
இதில், எதிர்வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் மீண்டும் முதலிடத்திலேயே நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்பு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, நிச்சயம் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.