டி20 உலக கோப்பையை இந்த அணிதான் வெல்லும் என்று தனது கணிப்பினை தெரிவித்து இருக்கிறார் மைக்கேல் பெவன்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. உலக கோப்பைக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாட உள்ளது. அதன் பிறகு அக்டோபர் 23ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்த வருடம் டி20 உலக கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியன் அணியாக களமிறங்குகிறது என்பதால் அந்த அணிக்கு கூடுதல் பலம் இருக்கும். மேலும் சொந்த மைதானம் என்பதால் பல நுணுக்கங்களும் தெரிந்து வைத்திருக்கும். அது மட்டுமல்லாது சமீபகாலமாக ஆஸ்திரேலியா அணி விளையாடும் விதமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் பலமிக்க ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா கூடுதல் பலமிக்க அணியாக தெரிகிறது.
அடுத்ததாக, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி20 போட்டிகளில் பலமிக்க அணியாக இருக்கும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து அணியும் மறுபுறம் மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. இந்த மூன்று அணியையும் குறிப்பிட்டு இதில் யார் டி20 உலக கோப்பையை வெல்வார் என மைக்கேல் பெவன் தனது கணிப்பினை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில்,
“நான் டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று யோசித்தவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்தியா. அதன் பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. தற்போது பலமிக்க அணியாக இருப்பது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான். ஆனால் ஆஸ்திரேலியா அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் பல அணிகள் திணறும் பொழுது, ஆஸ்திரேலியா அணிக்கு அதுதான் பலமாக இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்யும் பட்சத்தில், இந்த உலகக் கோப்பையை தட்டிச் செல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவிற்கு இருக்கிறது. மேலும் அந்த அணிக்கு சொந்த மைதானத்தின் பலம் இருப்பதால், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஆஸ்திரேலியாவை முதல் அணியாக நான் தேர்வு செய்கிறேன். ஆனால் மற்ற இரண்டு அணிகளை எக்காரணத்தைக் கொண்டும் புறம் தள்ளிவிட முடியாது.” என்றார்