கிடைத்த வாய்ப்பை வீணடித்த ஆஃப்கானிஸ்தான் அணி… வரலாற்றில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்கா
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான அரையிறுதி போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக இறூதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின.
பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கடந்த போட்டிகளில் முதல் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற நம்பிக்கையில் தென் ஆப்ரிக்கா அணியுடனும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, இந்த போட்டியில் பெரும் பின்னடைவு மட்டுமே ஏற்பட்டது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் சீனியர் வீரரான அஸ்மத்துல்லா ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் சம்சி மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போன்று ரபாடா மற்றும் அன்ரிச் நோர்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 8.5 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, ஐசிசி., தொடர்களில் முதல் முறையாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.