ஆரம்பித்து வைத்த அக்ஷர் பட்டேல்… கெத்தாக முடித்து கொடுத்த குல்தீப் யாதவ்; இங்கிலாந்தை பழி தீர்த்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி
நடப்பு டி,20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
மழை காரணமாக தாமதமாக துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிரடி துவக்கம் கொடுத்த ஜாஸ் பட்லரை தனது முதல் பந்திலேயே வெளியேற்றிய அக்ஷர் பட்டேல் போட்டியில் பெரும் திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்தார்.
ஜாஸ் பட்லர் விக்கெட்டை இழந்தபின் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
இங்கிலாந்து வீரர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்த அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வழக்கம் போல் தனது வேலையை இந்த போட்டியிலும் சத்தமே இல்லாமல் கச்சிதமாக முடித்து கொடுத்த பும்ராஹ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் 16.4 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.