ரோஹித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிய விராட் கோலி... அக்‌ஷர் பட்டேல் அபாரம்; 176 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 1
ரோஹித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிய விராட் கோலி… அக்‌ஷர் பட்டேல் அபாரம்; 176 ரன்கள் குவித்தது இந்திய அணி

டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸின் பர்படோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிய விராட் கோலி... அக்‌ஷர் பட்டேல் அபாரம்; 176 ரன்கள் குவித்தது இந்திய அணி !! 2

இதன்பின் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே 15 ரன்கள் குவித்தாலும், இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா (9), ரிஷப் பண்ட் (0) ஆகியோரின் விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவும் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார்.

இதன் பின் களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அக்‌ஷர் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். அடுத்ததாக களத்திற்கு வந்த சிவம் துபே, கடந்த போட்டிகளை போன்று இல்லாமல் இந்த போட்டியில் சற்று பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அணியின் தேவைக்கு ஏற்ப சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்களும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களும், ஜடேஜா 2 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் போட்டியின் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக கேசவ் மஹராஜ் மற்றும் அன்ரிச் நோர்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *