இந்திய அணியில் நிலவி வரும் பிசிசிஐ மற்றும் விராட்கோலி விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி.
இந்திய கிரிக்கெட் அணியில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் ஆகும். இது குறித்து கங்குலி தெரிவிக்கையில், “விராட் கோலியிடம் பலமுறை இதைப்பற்றி கூறிவிட்டோம். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் இருந்தால் சரி வராது என்று. ஆகையால் டி20 போட்டிகளில் இருந்து விலக வேண்டாம் என்று தெரிவித்தும் அவர் கேட்கவில்லை. பிசிசிஐ திட்டமிட்டபடி இரண்டு கேப்டன்கள் வேண்டாம் ஒரே கேப்டன் போதும் என ரோகித் சர்மாவை நியமித்து விட்டோம். இதைப்பற்றி விராட் கோலிக்கு தெளிவாக தெரிவித்தோம்.” என்று கூறினார்.

இதற்கு தனது பேட்டியில் பதில் கூறிய விராட் கோலி, “பிசிசிஐ தரப்பிலிருந்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பற்றி ஆலோசனை நடத்தினோம். அப்போது திடீரென நீங்கள் இனிமேல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் இல்லை என்று கூறிவிட்டார்கள். நானும் வேறு வழியின்றி சரி என்று ஒப்புக்கொண்டேன். இதுதான் நடந்தது.” என்றார்.
விராட் கோலி போன்ற மிகப்பெரிய கேப்டனை பிசிசிஐ நடத்திய விதம் முற்றிலும் சரி இல்லை என தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த வரிசையில் தனது கருத்தின தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி.

“விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய விவகாரம் சரியாக கையாளப்படவில்லை. கங்குலி ஒரு புறமும் விராட்கோலி ஒரு புறமும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முகத்திற்கு நேராக இருவரும் அமர்ந்து இது பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதேபோல் பிசிசிஐ இந்திய அணியின் வெற்றிக்கு எது தேவை மற்றும் வருங்கால திட்டங்கள் என்ன என்பது குறித்து விராட் கோலி இடம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். விராட் கோலியும் புரிந்துகொண்டு தனது கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பார். இல்லை எனில் இந்த முடிவை சரி என்று முழுமனதுடன் ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் அப்படி நடக்கவில்லை. பிசிசிஐ இந்த விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. அதேபோல் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் விராட் கோலியை இவ்வளவு மோசமாக நடத்தியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.” என்றார்.