திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி உள்ளூர் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பு என்று இந்திய ‘ஏ’ அணி வீரர் விஜய்சங்கர் கூறினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக இந்திய ‘ஏ’ அணி வீரர் விஜய்சங்கர், திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் உள்ளூர் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருக்கிறது.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஐ.பி.எல். மற்றும் ரஞ்சி அணிகளில் விளையாட இடம் கிடைக்கும். இதில் விளையாடினால், பிற போட்டிகளில் ஆடுவதற்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். மேலும் பெரும்பாலான ஆட்டங்கள் உள்ளூரில் நடப்பதால் நேரில் பார்க்கும் இளம்வீரர்களுக்கு உந்துதலாக அமையும் என்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊடக மேலாளர் பாபா கூறுகையில், ” இந்த முறை தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. 2 தகுதிச்சுற்று ஆட்டங்களும், ஒரு வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். மைதானத்தில் 11 ஆட்டங்களும், நெல்லையில் 13 ஆட்டங்களும், மீதமுள்ள ஆட்டங்கள் சென்னையிலும் நடக்கின்றன. நத்தத்தில் 25-ந்தேதி முதல் ஆட்டம் நடக்கிறது. 2 நாட்களில் மட்டும் தலா 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சிறப்பு ஏற்பாடு
பகல் ஆட்டங்கள் மாலை 3.15 மணிக்கும், இரவு ஆட்டங்கள் இரவு 7.15 மணிக்கும் தொடங்கும். இதே போன்று பல மாவட்டங்களில் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மெகா திரை மூலம் ஆட்டங்கள் ஒளிபரப்பப்படும்.
ஐபிஎல் வாய்ப்பு
இதுதவிர மதுரை, சென்னை, கோவையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் விழா நடக்கிறது. கடந்த முறை சிறப்பாக ஆடிய ஜெகதீசன், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சஞ்சய் யாதவ் ஆகியோருக்கு ஐ.பி.எல். போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
பங்கேற்பு
பேட்டியின்போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் பழனி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், நத்தம் என்.பி.ஆர். கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் ஜனகர், முதல் நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.