நடராஜனிடம் அப்படி ஒரு திறமை இருக்கிறது. அவரைப்போன்ற வீரர்தான் இந்திய அணிக்கு தேவை என புகழ்ந்திருக்கிறார் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தாக்கூர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 3வது போட்டியில் 4 மாற்றங்களுடன் களம் கண்ட இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உள்ளே எடுத்து வரப்பட்டார். சர்வதேச போட்டிகளில் இதுவே இவரது அறிமுகப் போட்டியாகும். ஆகையால் இவரது பந்துவீச்சை காண பலரும் ஆவலுடன் இருந்தனர்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவில் யார்க்கர் வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்த நட்ராஜன், அந்த அசாத்திய திறமையால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். முதலில் அவரை வலைப்பந்துவீச்சு வீரராகவே எடுத்துச் சென்றனர். பின்னர் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியதால் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது.
முதல் இரண்டு போட்டிகளில் நடராஜனை ஆட வைக்கவில்லை. தற்போது மூன்றாவது போட்டியில் அவருக்கு முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் தனது முதல் விக்கெட்டை மூன்றாவது ஓவரில் வீழ்த்தினார். இந்த சீசனில் இந்திய பந்துவீச்சாளர்கள்கள் பவர்ப்பிளே ஓவர்களில் எடுக்கும் முதல் விக்கெட் இதுவாகும்.
நடராஜன் ஆஸ்திரேலிய வீரர் லபுச்சானே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இவர் இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் நடராசனின் திறமையை பலர் பாராட்டினாலும், சக பந்து வீச்சாளரான ஷ்ரத்துள் தாக்கூர் ஒரு படி மேலே சென்று பாராட்டி இருக்கிறார். அவர் கூறுகையில்,
“நடராஜன் சிறந்த பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடர்களில் அவரது திறமையை நாம் கண்டிருக்கிறோம். அதைவைத்து இந்திய அணியிலும் இடம் பெற்றிருக்கிறார். ஒரு ஓவரில் அதிக ரன் விட்டுக் கொடுத்தாலும், அடுத்த ஓவரில் அதை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களை திணற வைக்கிறார். அவரிடம் இருக்கும் இந்த திறமைக்கு இன்னும் பல உயரங்கள் செல்வார். இவரை போன்ற வீரர்தான் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை.” என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.