டி20 உலகக்கோப்பை நடக்குமா? நடக்காதா? – என்ன சொல்கிறார் சச்சின்!
இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விக்கு தனது பதிலை அளித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சச்சின்.
கொரோனா வைரஸ் காரணமாக, மார்ச் மாதத்தில் இருந்து உலகில் எவ்வித கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. சில நாடுகளில் வைரஸ் தாக்கம் குறைவதால், வீரர்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கொரோனா தோற்று யாருக்கும் இல்லை.
இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியை துவங்கினர். இங்கிலாந்து – விண்டீஸ் தொடர் அடுத்த மாதம் 8ஆம் தேதி துவங்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு தயக்கம் காட்டிவருகின்றனர். ஆகஸ்ட் மாதம் இயல்பு நிலைக்கு வருமா? என பிசிசிஐ எதிர்நோக்கி காத்திருக்கிறது.
அதேபோல, வருகிற அக்டொபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடக்கவிருந்தது. ஆனால் தற்போதைய நிலையை பார்க்கையில், குறிப்பிட்ட நேரத்தில் உலகக்கோப்பையை நடத்த இயலாது. ஆகையால் ஜூலை மாதம் இறுதிவரை காத்திருந்து முடிவெடுக்கலாம் என ஐசிசி நிர்வாகம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:
“டி20 உலககோப்பை கிரிக்கெட்டின் நடக்குமா? என என்னிடம் கேட்டால் நான் என்னகூறுவது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கையில் அந்த முடிவு உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
இக்கட்டான சூழல் நிலவுவதால் நிதி நிலைமை உள்ளிட்ட பலவற்றை அவர்கள பரிசீலிக்க வேண்டும் என்பது எனது கருத்து. இதுகுறித்து முடிவு எடுப்பது கடினமானது தான். ஆனால் கிரிக்கெட் நடக்க வேண்டும். அதேநேரம் மைதானத்தில் ரசிகர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். வீரர்களுக்கு சோர்வடையும் நேரங்களில் அவர்களே உற்சாகம் கொடுப்பர். ரசிகர்கள் இல்லாமல் நடத்தினால் சற்றும் சுவாரஸ்யம் இருக்காது.” என்றார்.