ஒவ்வொரு நாளும் நான் கடுமையாக உழைப்பதற்கு இதுதான் காரணம் ; மனம் திறந்த முகமது சிராஜ்..
டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடுமையாக முயற்சி செய்து வருவதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வரும் இளம் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு கட்டத்தில் மோசமான பந்துவீச்சால் நெட்டிசன்களின் செல்ல பிள்ளையாக திகழ்ந்தார்.
கடுமையான விமர்சனத்திற்கு ஆளான முகமது சிராஜ், இதற்கு மேல் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று கூறும் அளவிற்கு விமர்சிக்கப்பட்டார். இருந்த போதும் இவருடைய கடின முயற்சியால் தன்னுடைய மோசமான பார்மிலிருந்து மீண்டு வந்து சிறப்பாக பந்துவீசத் துவங்கி விமர்சித்தவர்களையெல்லாம் வாயடைக்கும்படி செய்தார்.
இதன் காரணமாக 2020-2021 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு முகமது சிராஜுக்கு கிடைத்தது, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிராஜ், அந்தத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைப்பதற்கு மிகப்பெரும் உதவியாக திகழ்ந்தார்.
இதன் காரணமாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இவர் மீது நம்பிக்கைவைத்து பல வாய்ப்புகளை கொடுத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட முகமது சிராஜ் டெஸ்ட் தொடருக்கான ரெகுலர் வீரராக வலம் வரத் தொடங்கியுள்ளார்.
டெஸ்ட் தொடர்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது;முகமது சிராஜ்..
இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கும் முகமது சிராஜிடம் பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சரேக்கர், டெஸ்ட் தொடர் குறித்த கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு பதில் அளித்த முகமது சிராஜ் தனக்கு டெஸ்ட் தொடர் தான் மிகவும் விருப்பமான தொடர் என்றும் அதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறேன் என்றும் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து முகமது சிராஜ் பேசுகையில்,“டெஸ்ட் தொடர்தான் எனக்கு மிகவும் பிடித்தமான தொடராகும், அதற்காக நான் கடினமாக முயற்சி செய்து வருகிறேன், ஒவ்வொரு நாளும் 90 ஓவர்களை வீசும் அளவிற்கு என்னுடைய உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறேன், தற்பொழுது நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டதும் என்னுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது” என முகமது சிராஜ் தெரிவித்திருந்தார்.