உலகக்கோப்பைக்கான அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதில் சரியான முறையை கையாளவில்லை என்றும் முறைகேடு நடந்து இருப்பதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனியின் ஏழாவதாக களம் இறக்கப்பட்டார்? சிறப்பாக பந்துவீசி 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஏன் முக்கியமான அரையிறுதிப்போட்டியில் எடுக்கப்படவில்லை? என்கின்ற கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.
இதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் தங்கள் தங்கள் தரப்பில் இருந்த விளக்கங்களையும் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரி ஒருவர் நிருபர்களிடம், “உலக கோப்பை அணிக்கான வீரர்கள் தேர்வில் சரியான முறையைக் கையாளவில்லை. தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வந்தன” என தனது தரப்பு கருத்துகளை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், “துவக்க வீரர்கள் காயம் ஏற்பட்டு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதற்கு மற்றொரு துவக்க வீரரையே அணியில் கொண்டுவரவேண்டும். எதற்க்காக நடுவரிசை வீரர் ரிஷப் பண்ட்டை எடுத்து வந்தீர்கள்? அதேபோல நான்காவது இடத்திற்கு எடுக்கப்பட்ட விஜய் சங்கர் காயம் ஏற்பட்டு வெளியேறுகையில், மற்றொரு நடுவரிசை வீரரை கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும். ஏன் துவக்க வீரர் மயங்க் அகர்வாலை உள்ளே எடுத்து வந்தீர்கள்?. இதற்கு தலைமை தேர்வு குழு அதிகாரி எம் எஸ் கே பிரசாத் விளக்கம் அளிக்க முடியுமா? என்ற கேள்விகளையும் முன்வைத்தார்.
மேலும் ஒரு நிலையான நடுத்தர வரிசை அமைக்காமல் வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் மாற்றிக்கொண்டே இருந்தது வீரர்களின் நிலையான மனப்போக்கை பாதித்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தை கொடுக்கும் அளவிற்கு தலைமை அவர்களிடம் நடந்து கொள்ளவில்லை என்றார்.