எங்கள் அணியில் இவர்கள் இருப்பது பக்கபலமாக இருக்கும்; கோப்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என மனம் திறந்து பேசியிருக்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்றன. அதற்காக ஏற்கனவே துபாய் மற்றும் அபுதாபி சென்ற வீரர்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு இயல்பு நிலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி ஆவலுடன் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் ஐந்து மாத காலத்திற்கு மேலாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாததால் ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னணி வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி வந்த அஜிங்கிய ரஹானே டெல்லி அணியில் இணைந்து இருக்கிறார்.
இவர்கள் இருவரின் அனுபவமும் திறமையும் அணிக்கு எந்த வகையில் உதவும் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். அவர் தெரிவித்ததாவது:
ஐபிஎல் தொடரில் சிறந்த மற்றும் வெற்றியடைந்த சுழல்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். இவரின் அனுபவம் மற்றும் சமயோஜித புத்தி இரண்டும் டெல்லி அணிக்கு பக்கபலமாக இருக்கும். அதேநேரம் அஜிங்கிய ரஹானே ராஜஸ்தான் அணியை வழி நடத்திச் சென்றிருக்கிறார். இந்த அனுபவம் மிக உயர்ந்தது. இதுவும் டெல்லி அணிக்கு கிடைத்திருப்பதால் இவர்கள் இருவரையும் வைத்து டெல்லி அணி சவால்மிக்க அணியாக இருக்கும்.
கோப்பையை வெல்லும் அளவிற்கு திறன் படைத்ததும் கூட. இவர்களுடன் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பதால், இவர்களின் அனுபவத்தின் உதவியுடன் அவரால் எதையும் செய்ய இயலும். மற்ற இளம் வீரர்கள் துடிப்புடன் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கலவையான பேலன்ஸ் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் நிச்சயம் புதுவிதமாக டெல்லி அணிக்கு இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு பேட்டியளித்தார்.