இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில், பும்ரா போன்ற வீரர்களை பாராட்டிப் பேசியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமாகிய ஜஸ்பிரித் பும்ரா உலக கிரிக்கெட் வல்லுநர்கள் போற்றும் வகையில் தற்பொழுது மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறார், அவருடைய பந்துவீச்சை ராக்கெட் அறிவியலோடு ஒப்பிட்டு பேசும் வகையில் மிக சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார். மேலும் இவருடைய பந்துவீச்சை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
அதைப்போன்று 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் அறிமுகமாகிய சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிக சிறப்பாக விளையாடியதன் மூலம் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்டார். இவருடைய அபாரமான பேட்டிங் திறமையின் மூலம் எதிர்கால இந்திய அணியில் முக்கிய பங்காற்றுவார் என்று கருதப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான இளம் வீரர் ரிஷப் பண்ட் அடுத்த தோனி என்று பாராட்டும் வகையில் மிகச் சிறந்த முறையில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் மூவர் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது பாராட்டிப் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், இந்த மூன்று வீரர்களும் சில வருடங்களுக்கு முன்புதான் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள் ஆனால் இவர்கள் எந்த ஒரு பயமும் இன்றி அபாரமாக விளையாடுகிறார்கள்,அவர்களுடைய திறமையை மற்றும் அதிரடியான ஆட்டத்தை முன்னாள் தலைமுறையுடன் ஒப்பிடும் பொழுது அவர்கள் கற்றுக்கொண்டதை விட இவர்கள் சீக்கிரமே கற்றுக் கொண்டார்கள். என்று பேசியிருந்தார்.
மேலும் ஐபிஎல் தொடர் குறித்து பேசிய ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடர் உலகின் தலைசிறந்த வீரர்களும் தங்களது அனுபவங்களை மற்றும் திறமைகளை பகிர்ந்துகொள்ளும் தொடராக இருப்பதால் வீரர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மிகப் பெரும் உதவியாக உள்ளது என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது