ஒரே டபுள் செஞ்சுரியில்.. ஷிகர் தவான் எதிர்காலத்திற்கு முடிவு கட்டிவிட்டாரா இஷான் கிஷன்? – தினேஷ் கார்த்திக்!

ஷிகர் தவான் எதிர்காலம், இஷான் கிஷன்-இன் இரட்டை சதத்திற்கு பிறகு தற்போது கேள்விக்குறியாகியுள்ளதா? என்பதற்கு பதில் கொடுத்திருகிறார் தினேஷ் கார்த்திக்.

தற்போது இந்திய அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் மாற்று வீரர்கள் வருவதற்கு பல போட்டிகள் நிலவுகின்றன. குறிப்பாக துவக்க வீரராக வருவதற்கு நான்கு முதல் ஐந்து வீரர்கள் போட்டி போடுகின்றனர்.

அதில் ஒரு இடம் ரோகித் சர்மாவிற்கு என உறுதியாகிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஷிகர் தவான், சுப்மன் கில் போன்ற வீரர்கள் கடுமையாக போட்டி போடுகின்றனர்.

இஷான் கிஷன் கிடைத்த ஒரு வாய்ப்பில் நன்றாக செயல்பட்டு,  131 பந்துகளில் 210 ரன்கள் விலாசி தவிர்க்க முடியாத வீரர் என்று நிரூபித்திருக்கிறார். இஷானின் இத்தகைய அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்கிற கேள்விக்கு இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பதில் கொடுத்திருக்கிறார்.

37 வயதான ஷிகர் தவான், ஐசிசி போட்டிகளில் அபாரமாக விளையாடியிருப்பது பலரும் அறிந்த ஒன்று. குறிப்பாக 2019 50 ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி நல்ல புள்ளி விவரங்களை வைத்திருந்தாலும், ஒரே ஒரு தொடரில் (வங்கதேசம்) மோசமாக விளையாடியது மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது.

இது பற்றி தினேஷ் கார்த்திக் பேசுகையில், “இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் எந்த இடத்தில் இருப்பார்? இப்படி ஒரு ஆட்டத்தை இஷான் கிஷன் வெளிப்படுத்திய பிறகு அவரை வெளியில் அமர்த்துவது பற்றி இனியும் சிந்திப்பார்களா? ஆகியவற்றிக்கு அணி நிர்வாகம் எப்படி பதிலளிக்கும் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

ஒருவேளை இஷான் கிஷனை அணி நிர்வாகம் பிளேயிங் லெவனில் எடுத்தால், ஷிகர் தவான் வெளியில் அமர்த்தபடுவதற்கு பல்வேறு கேள்விகள் எழும். அதற்கு புதிதாக வரும் தேர்வுக்குழுவினர் எப்படி பதில் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கவும் ஆவலோடு இருக்கிறேன்.

இதற்கிடையில், சுப்மன் கில் துவக்க இடத்திற்கு போட்டி போடுகிறார். அதை நாம் மறந்துவிடக்கூடாது. அவரும் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கிடைத்த ஒரு வாய்ப்பை இரு கரங்கள் நீட்டி பெற்றிருக்கிறார் இஷான் கிஷன். தன்னை இறக்கி விட்டால், எப்படி எளிதாக 300 ரன்கள் வரும் என்பதை பேட்டிங் மூலம் காட்டியிருக்கிறார். மேலும், நான் இங்கு தான் இருக்கிறேன்! என்றும் சத்தமாக பேட்டிங் மூலம் கூறியிருக்கிறார். வரும் போட்டிகளில் அவரை அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். இதன் மூலம் ஷிகர் தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்று கேட்டால், அதற்கு அவர்தான் பேட்டிங் மூலம் பதில் கூற வேண்டும். கிடைக்கும் ஓரிரு வாய்ப்புகளில் அவர் தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.