டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து எனது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்த இரு இந்திய வீரர்களான கோஹ்லி, ரோகித் சர்மாவிற்கு உள்ளது என விண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
விண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மற்றும் வீரர் பிரைன் லாரா 2004ல் ஆன்டிகுவாவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
லாராவின் 400* ரன்கள் சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே, 374 ரன் எடுத்து லாரா சாதனையை முறியடிக்கத் தவறினார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர், 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துரதிஷ்டவசமாக, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் டிக்ளேர் செய்தார். இதனால், வார்னரால் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியாமல் போனது.
இதுகுறித்து பிரையன் லாரா கூறியதாவது,
அதிரடியாக ரன் சேர்க்கும் வீரரால் மட்டுமே எனது 400 ரன் சாதனையை முறியடிக்க முடியும். தற்போதுள்ள வீரர்களின் பார்ம் வைத்து பார்க்கையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் வார்னருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் டிக்ளேர் முடிவால் சாதனை படைக்க முடியாமல் போனது என லாரா கூறினார்.
முன்னதாக, லாரா இந்திய வீரர்களில் ரோகித் சர்மா மற்றும் பிரிதிவி ஷா இருவருக்கு மட்டுமே இந்த 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். இதற்க்கு நெட்டிசன்கள், விராட் கோலி அடிக்க மாட்டாரா? என கேள்வி எழுப்பினர்.
தற்போது லாராவின் இந்த புதிய பதில், லாரா அந்தர் பல்டி அடித்துள்ளாரா? என மேலும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.