4-வது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் இவ்வாறு தயாராகிறது என புகைப்படம் வெளியிட்டு கிண்டல் அடித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிவரும் டெஸ்ட் தொடரின் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள மான்டெரா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே பந்துவீச்சு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது. டர்ன் அதிக அளவில் ஆனதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் இரண்டு இன்னிங்சிலும் 150 ரன்களை கடக்க முடியாமல் தடுமாற்றம் கண்டு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கிட்டத்தட்ட வரலாறு படைத்தனர்.
இதன்காரணமாக அகமதாபாத் ஆடுகளம் முற்றிலும் தரமற்றதாகவும், இந்திய அணியின் நிர்வாகம் திட்டமிட்டு ஆடுகளத்தை இவ்வாறு தயார் செய்து இங்கிலாந்து அணியை கவிழ்த்து விட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும் தற்போதைய கேப்டனும் கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் மட்டுமல்லாது இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலரும் இந்த மைதானம் குறித்து தங்களது விமர்சனத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர்.
மேலும் சில ஜாம்பவான்கள், “மைதானம் தனித்துவமானவை. ஒவ்வொரு மைதானமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒன்றுபோல மற்றொன்று இருந்தால் அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது.” என ஆதரவு குரலும் கொடுத்தனர்.
ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தை விமர்சித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 4-வது டெஸ்ட் போட்டிக்கும் ஆடுகளும் இவ்வாறு தயாராகிறது என கடும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் விவசாயி ஒருவர் ஏறுதழுவுதல் போல இருந்ததால், விவசாயிகளை கிண்டலடிப்பது முற்றிலும் தவறு என்றும் இந்திய ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
3-ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையை சொல்லுங்கள். இந்த ஆடுகளம் ஐந்து நாட்கள் நடைபெறும் போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்ததா? என்றும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.