இவரைப்பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமல்லஎனக்கூறி ரஹானே மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, 0-1 என டெஸ்ட் தொடரில் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டாமல் விளையாடினர் என்று விமர்சனங்கள் வந்தாலும், துணை கேப்டன் ரகானே படுமோசமாக விளையாடினார்; அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவது அவசியமா? என்ற விமர்சனங்களையும் பலர் முன் வைத்திருக்கின்றனர்.

போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய விராட்கோலி, முறையற்ற விமர்சனத்திற்கு தக்க பதில் கொடுத்திருக்கிறார்.
“ரஹானேவின் பேட்டிங் திறமை குறித்து நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. பல இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய ரசிகர்கள் அதை கண்டிருக்கின்றனர். ஆகையால் அவர் 1 அல்லது 2 இன்னிங்ஸ்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை வைத்து அணியில் இருப்பது அவசியமா? இல்லையா? என்ற புரிதலற்ற விமர்சனத்திற்கு பதில் அளிப்பது சரியானதாக இருக்காது.

புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அணியின் ஆட்டத்தை மாற்றும் அளவிற்கு திறமை படைத்தவர்கள். அவர்களின் பங்களிப்பு அணிக்கு நிச்சயம் தேவை. ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இக்கட்டான சூழ்நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டபோது, ரஹானே அடித்த முக்கியமான சதம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. நாம் அதை மகிழ்வுடன் கண்டிருப்போம். அவரின் திறமையான ஆட்டத்திற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே.” என பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்திய அணி கடந்த 2017-ம் ஆண்டு புனே மைதானத்தில் தோல்வியை தழுவிய பிறகும் தொடரை கைப்பற்றியது. அதேபோல தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படுவோம். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.” என்றும் பேசியிருக்கிறார்.