டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதில் இருக்கும் ஒரே சிக்கல் இதுதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசி தரப்பிற்கு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்போது வரை தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் கொரனோ தாக்கம் குறைந்து வருவதால் அங்கு வீரர்கள் மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரனா வைரஸ் தாக்கம் பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் தொடர் எப்போது நடக்கும் என தேதி குறிப்பிடப்படாமல் இருக்கின்றன.
இந்நிலையில், அக்டோபர் 18-ம் தேதி துவங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் வீரர்களும் பயிற்சிக்கு செல்லவில்லை.
இதனால், குறிப்பிட்ட தேதியில் உலக கோப்பை தொடரை நடத்த இயலுமா? என தொடர்ந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான தொடரை நடத்துவதில் சிக்கல் இல்லை. ஆனால் 16 அணிகள் பங்கேற்கும் தொடரை நடத்துவதில் சிக்கல் இருக்கிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், “டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதில் எங்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது 16 அணி வீரர்கள் பங்கேற்பது தான். ஏனெனில் இருதரப்பு தொடர் என்றால் வீரர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தி பயிற்சிக்கும் போட்டிக்கும் அனுமதிக்கலாம். ஆனால் 16 விதமான நாடுகளிலிருந்து வீரர்கள் வருவதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் பரிசோதனையும் இந்த இக்கட்டான சமயத்தில் கொடுப்பது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு ஐசிசி முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிப்பதில் எங்களுக்கு சிக்கல் இல்லை. அவர்களை உரிய முறையில் வெளியிலேயே பரிசோதனை செய்து மைதானத்திற்குள் அனுமதித்து விடுவோம்.” என்றார்.
இதற்கிடையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ள இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் விண்டீஸ் இரு அணிகளும் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இருதரப்பு வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைபடுத்தி பயிற்சியும் நடக்கிறது.