இந்த வீரரை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள் என்ற ரசிகர்களின் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் இரண்டு காரணங்களை முன் வைத்திருக்கிறது பிசிசிஐ தேர்வுக்குழு.
டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ தேர்வுக்குழு வெளியிட்டது.
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் கூட ஆட வைக்கப்படவில்லை. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை.
ஒரு போட்டியில் கூட ஆட வைக்கப்படாமல், எப்படி அவரை அணியில் இருந்து நீக்க முடியும் என சமூக வலைதளங்களிலும் செய்தித் தாள்களிலும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.
தற்போது சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான இரண்டு காரணத்தை பிசிசிஐ தேர்வு குழு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
முதலாவது காரணமாக விராட் கோலியை காரணமாக குறிப்பிட்டனர். அதாவது வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி ஓய்வு பெற்றிருந்தார். மிடில் ஆடர் பேட்ஸ்மேன் வைப்பட்டதால், சஞ்சு சாம்சன் அணியில் இணைக்கப்பட்டார். மீண்டும் விராட்கோலி அணிக்கு திரும்பியதால் சாம்சன் நீக்கப்பட்டார் என்றது.
இரண்டாவது காரணமாக மனிஷ் பாண்டே மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் தேர்வுக்குழு தரப்பு குறிப்பிட்டிருந்தது. அதாவது கீப்பிங் ஸ்கில்ஸ் பொருத்தவரை சாம்சன் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை. அதனால் ரிஷப் பண்ட் முன்னுரிமை பெற்றார்.
மனிஷ் பாண்டே மற்றும் சாம்சன் இருவரையும் ஒப்பிடுகையில், சர்வதேச அளவில் மனிஷ் பாண்டே நல்ல அனுபவம் பெற்றிருப்பதால் அவரை ஆட வைக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த காரணங்கள் ரசிகர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை. ஆதலால், ரசிகர்கள் தேர்வுக்குழு மீது சற்று கடுப்பில் இருக்கின்றனர். நாளுக்குநாள் பிசிசிஐ தேர்வுக்குழு கடும் விமர்சனங்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.