எலிமினேட்டரில் கோஹ்லி செய்த காரியம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது: ஜாம்பவான் கொடுத்த விளக்கம்! 1

எலிமினேட்டரில் கோஹ்லி செய்த காரியம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது: ஜாம்பவான் கொடுத்த விளக்கம்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த காரியம் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இரு அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய வந்த பெங்களூரு அணிக்காக, இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு விராட்கோலி படிக்கல் உடன் துவக்க வீரராக களமிறங்கினார்.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த செயல் பெங்களூரு அணிக்கு பெரிய அளவில் பலனளிக்கவில்லை. ஏனெனில் விராட் கோலி 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பெங்களூரு அணி பேட்டிங் வரிசையை பொருத்தவரை டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி இருவரை மட்டுமே பெரிய அளவில் நம்பி இருக்கிறது. எலிமினேட்டரில் விராட்கோலி சரிவர ஆடவில்லை. ஆனால் டிவில்லியர்ஸ் நன்றாக ஆடினாலும் மற்றவர்கள் சொதப்பியதால் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால் இம்முறையும் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கியது குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்கியது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த தொடரில் அவர் துவக்க வீரராக இறங்கியது இல்லை. அது எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என தெரியவில்லை. எதற்காக முக்கியமான போட்டியில் இப்படி செய்ய வேண்டும். அது பெங்களூரு அணியை பெரிதளவில் பாதித்திருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு ஹோல்டர் பந்து வீசிய விதம் சிறப்பாக அமைந்தது.

அவரது முதல் ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. அவரது அவுட் ஸ்விங் பந்தை சற்று தள்ளி சென்று அடிக்க முயற்சித்த விராட் கோலி அவரது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் படிக்கல்லும் வெளியேறியதால் ஆட்டம் ஹைதராபாத் அணி பக்கம் திரும்பியது என்று நான் கருதுகிறேன்.” என தனது கருத்தை தெரிவித்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *