இந்த வீரருடைய ஆட்டம் எனக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது என பெருமிதமாக பேசியுள்ளார் டேவிட் வார்னர்.
26 வயதான டிம் டேவிட், சமகாலத்தில் டி20 போட்டிகளில் அபாயகரமான ஃபினிஷர் ஆக திகழ்ந்து வருகிறார். சிங்கப்பூர் அணிக்காக விளையாடி வந்த இவர் தற்போது ஆஸ்திரேலியா அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார். முதன்முறையாக இந்திய அணியுடன் நடந்த டி20 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
நடந்து முடிந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் அபாரமாக விளையாடி தனது அறிமுகத்தை அனைவருக்கும் வெளிக்காட்டினார். அதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 20 பந்துகளில் 43 ரன்கள் அடித்து மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்தாலும், துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இருப்பினும் இவரது ஆட்டத்தை அங்கீகரித்து ஆஸ்திரேலிய அணியின் மூத்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் பெருமிதமாக பேசியிருக்கிறார். மேலும் இவர் டி20 உலக கோப்பையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
“டிம் டேவிட் தனக்குள் மிகப்பெரிய பவரை வைத்திருக்கிறார். மிகச் சிறந்த மனிதராகவும் இருக்கிறார். இவை இரண்டையும் பார்க்கும் பொழுது எனக்கு பொல்லார்ட்-இன் ஞாபகம் வருகிறது. கூடுதலாக இவர் நன்றாக பவுலிங் செய்கிறார். ஆகையால் ஒவ்வொரு முறையும் இவர் ஆடும்பொழுது எனக்கு பொல்லார்ட் உடன் ஒப்பிடும் பழக்கம் வந்து விடுகிறது. இவருடன் சேர்ந்து விளையாடும் பொழுது நான் அடிக்கும் ஷாட்கள் மிகவும் சின்னதாக தெரிகிறது. டேவிட் அந்த அளவிற்கு பவராக அடிக்கிறார். எளிதாக பௌண்டரிகளை சிக்ஸர்களாக மாற்றி விடுகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் இவரை முதல்முறையாக பார்த்தேன். ஆடும் விதம் நேர்த்தியாக இருந்தது. இவரது ஆட்டத்தில் பெரிதளவில் குறைகள் சொல்வதற்கு இல்லை. அதேபோல் இவருக்கு பலவீனம் என்று பெரிதாக எதுவும் இல்லை. இதுவே கூடுதல் பலம். நிச்சயம் வருகிற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு கீழ் வரிசையில் முக்கிய திருப்புமுனை வீரராக இருப்பார்.” என்றார்.
சமீபத்தில் டேவிட் வார்னரின் கேப்டன் பொறுப்புக்கான தடை விலக்கப்பட்டது. இது குறித்தும் தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வருடம் டேவிட் வார்னர்-இன் பேட்டிங் கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதால், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் வார்னர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறது.