மேலும் ஒரு முக்கிய தொடரும் ரத்து; கவலையில் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள்
கொரோனாவின் தாக்கம் காரணமாக தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கும் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எவ்விதமான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து – விண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடரும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து அயர்லாந்து இடையேயான ஒருநாள் தொடரும் நடைபெற்றது.
மார்ச் மாதம் துவங்கிய கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால், மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐ.பி.எல் டி.20 தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் டி.20 உலகக்கோப்பை ரத்து செய்யப்பட்டு, 2022ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது போன்று பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வரும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பேசிய டிஎன்பிஎல் நிர்வாகி வருவர், “ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு, வீரர்கள் அனைவரும் ரஞ்சிக் கோப்பைக்குத் தயாராகி விடுவார்கள். அதனால், இந்த வருடம் டிஎன்பிஎல் தொடர் நடைபெறுவதற்குச் சுத்தமாக வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.