இப்படியே இருந்தா ரொம்ப கஷ்டம்… இத மாத்துனா மட்டும் தான் டி.20 போட்டிகளில் இனி தப்பிக்க முடியும்; இந்திய அணியை எச்சரித்த ஹர்பஜன் சிங்
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூன்று வீரர்களும் தங்களுடைய மந்தமான ஆட்டத்தை விட்டுவிட்டு அதிரடியாக விளையாட துவங்க வேண்டும் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு தொடரில் புலியை போல் பாயும் இந்திய அணி, ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் வழக்கம் போல் மண்ணைக் கவ்வியது.
குறிப்பாக நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. தொடர் துவங்குவதற்கு முன்பு கோப்பை நமக்குத்தான் என்று வாய் சவடால் விட்ட இந்திய அணி, தற்போது ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஓரளவிற்கு போராடி தோல்வியை தழுவியிருந்தாலும் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் நெருக்கடியை ஒரு சதவீதம் கூட சமாளிக்க முடியாமலும், சீனியர் வீரர்களின் பங்களிப்பு சுத்தமாக இல்லாததன் காரணமாகவும் இந்தியா அணி மிக மோசமான முறையில் தோல்வியை தழுவியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக டி20 தொடருக்கான இந்திய அணியில், செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்தும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்தும் முன்னால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக செயல்பட வேண்டும் அப்பொழுது தான் வெற்றி பெற முடியும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில்,“டி20 தொடருக்கான தன்னுடைய பார்வையை இந்திய அணி மாற்ற வேண்டும். முதல் ஆறு ஓவர்கள் மிக முக்கியம், அதில் அடித்து ஆட வேண்டும், இந்திய அணி எப்பொழுதும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவையே நம்பி உள்ளது, அவர்கள் 20 பந்துகளில் அதிரடியாக செயல்பட்டு 50 ரன்கள் குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் இந்திய அணியின் மொத்த ரண்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுகிறது, இதை முதலில் மாற்ற வேண்டும். இங்கிலாந்து அணி தன்னுடைய அணியின் போக்கை மாற்றி தற்பொழுது இரண்டு உலகக் கோப்பை தொடரை வெற்றி பெற்றுள்ளது(2019ODI,2022T20), டி20 தொடரை டி20 தொடர் போல் விளையாட வேண்டும் ஆனால் இந்திய அணி ஒருநாள் தொடர் போல விளையாடி வருகிறது எனவும் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் மும்மூர்த்தி என அழைக்கப்படும் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரின் ஆட்டம் குறித்து பேசிய ஹர்பஜன்சிங், இந்த மூன்று வீரர்களும் 110 அல்லது 120 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடுகின்றனர். ஆனால் அப்படி விளையாடுவது அணியின் ஸ்கோரை பாதிக்கும்,அவர்கள் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் ஓவருக்கு 9 ரன்கள் வீதம் அடிக்க வேண்டும், நான் மட்டும் இந்திய அணியை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம், இந்திய அணியின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வீரர்களை மாற்றாமல் அணியின் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று நான் தெரிவிக்கிறேன்” என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.