கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி! வீட்டில் இறந்து கிடந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
திரிபுராவில் வீட்டிற்குள்ளே இளம் பெண் கிரிக்கெட் வீரர் இறந்து கிடந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் இவரது இழப்பு கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரை இந்தியா இரண்டாவது தோனியாக பார்த்தது இதற்கு காரணமாகும்.
இவரது மரணத்திற்கு நீண்ட நாட்களாக இவர் இருந்து வந்த மன அழுத்தமே காரணம் என ஒரு தரப்பு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டு வராத சூழ்நிலையில், நேற்று திரிபுரா மாநிலத்தில் இளம் பெண் கிரிக்கெட் வீரர் ஒருவர் வீட்டிலேயே இறந்து கிடந்த சம்பவம் மேலும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வீட்டில் இறந்து கிடந்த நிலையில் கிடந்த பெண்ணின் பெயர் அயந்தி ரியங். இவருக்கு வெறும் 16 வயது ஆகிறது. திரிபுர மாநிலத்தின் அண்டர் 19 பெண்கள் கிரிக்கெட் அணியின் வீரராவார். கடந்த 16ஆம் தேதி இவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கான முழு காரணம் தற்போது வரை தெரியவில்லை.
தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் நண்பர்கள் வட்டாரத்திலும் வீட்டின் அருகிலும் நடந்து வருகின்றன. அயந்தி ரியங் திரிபுரா அண்டர் 19 பெண்கள் அணிக்காக கடந்த ஓராண்டு காலமாக ஆடி வருகிறார். அதேபோல் 23 வயது உட்பட்டோருக்கான டி20 போட்டியிலும் திரிபுரா மாநிலத்தில் ஆடி வருகிறார்.
இவர் இந்த ஆண்டு அண்டர் 19 அணியில் பங்கேற்பதற்காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர்கள் பயணித்து வருகிறார். இத்தகைய திறமைசாலி வீராங்கனை திரிபுரா மாநிலம் இறந்துவிட்டது அம்மாநிலத்தின் கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், “இந்த இளம்பெண் அண்டர் 16 அணியிலிருந்து ஆடி வருவதை நான் பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையான வீராங்கனை என்பதால் விரைவாகவே அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினார். தற்போது இவரது இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
“கடந்த சீசன் வரை மிகச் சிறப்பாக ஆடி வந்த வீராங்கனைகளில் இவரும் ஒருவர். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இந்த வீராங்கனைகளுக்கு இணையதளம் மூலம் சில வகுப்புகளும் பயிற்சிகளையும் அளித்து வந்தோம். ஆனால் அவர்கள் குடும்பத்திற்குள் ஏதோ சண்டை சச்சரவு இருந்திருக்கும் என தெரிகிறது. அதன் காரணமாக கூட இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என்று யோசிக்கிறோம். போலீசார் விரைவில் விசாரணையை நடத்தி அதற்கான ஞாயத்தை கிடைக்கச் செய்ய வேண்டும்.” என்றார்.