இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய அழைத்தது.
Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS
இந்திய வீரர்கள் இலங்கை பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். ரன் குவிக்கவும் தவறிய இந்திய வீரர்கள் பவர் ப்ளே எனப்படும் முதல் 10 ஓவர்களில் ஒருநாள் போட்டி வரலாற்றில் மிகக் குறைந்தபட்சமாக 11 ரன்கள் மட்டும் எடுத்தனர். முதல் 5 ஓவர்களில் ஒரு பந்தைத் தவிர அனைத்து பந்துகளிலும் ரன் எடுக்கப்படவில்லை.
ரன்கள் சேராத நிலையில் விக்கெட்டுகளும் மடமடவென சரிந்தன. ஆனால், இறுதியில் இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவட் ஆனது. தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடி தனது 67வது அரைசதத்தை அடித்தார். 87 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 65 ரன்கள் குவித்த அவர் கடைசியாக ஆட்டமிழந்தார். அவருடன் சிறிது நேரம் ஒத்துழைத்த குல்தீப் யாதவ் 19 ரன்கள் சேர்த்தார். பாண்டியா 10 ரன்களில் வெளியேறினார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ஸ்கோர்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளை அள்ளினார். நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூஸ், பெரேரா, தனஞ்சயா, பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், முக்கியமான நேரத்தில் இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் மகேந்திர சிங் தோனி அரைசதம் அடித்ததால், ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் மாஸ் காட்டி வருகிறார்கள்.