இந்த 3 பேரால் தான் கிரிக்கெட் வளர்ந்துள்ளது.. அதில் சச்சின் இல்லை – முன்னாள் பாக்., கேப்டன் பேச்சால் கடுப்பான இந்திய ரசிகர்கள்!
இவர்கள் மூவரால் தான் அந்தந்த காலகட்டத்தில் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்துள்ளது என பாக்., அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதால் இந்திய ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக் கிரிக்கெட் உலகம் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவு செய்து அதனை யூடியூப் பக்கங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், கிரிக்கெட் உலகில் அந்தந்த காலகட்டங்களில் புதுவித யுக்திகள் மற்றும் செயல்திறனை செலுத்தி ஆட்டத்தின் மீதான போக்கையே மாற்றியமைத்த 3 முக்கிய வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டார்.
குறிப்பாக, கற்பனை திறன், புதுவித பேட்டிங் டெக்னிக் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்த காலகட்டத்தில் அசத்திய 3 வீரர்கள் இவர்கள் தான்;
முதலாவதாக, 70 மற்றும் 80களில் வேகப்பந்துவீச்சார்களை திணறடிக்கும் அளவிற்கு பேட்டிங் திறனை வெளிப்படுத்திய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை குறிப்பிட்டார்.
இரண்டாவதாக, இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சனத் ஜெயசூர்யாவை குறிப்பிட்டார். 96ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் 15 ஓவர்களில் இவரின் அதிரடி அசாத்தியமானது என்பதை வைத்து இவருக்கு இடமளித்ததாக தெரிவித்தார்.
3வதாக, தற்போதைய காலகட்டத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்களில் டி வில்லியர்ஸ் மிக முக்கியமானவர். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் அடிக்க கூடிய திறன் கொண்டவர் என குறிப்பிட்டார்.
இவரின் இந்த பட்டியலில் கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் பலர் ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

சச்சின் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றளவும் சச்சினின் பல சாதனைகள் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன. இதனை வைத்து புரிந்துகொள்ள வேண்டாமா? அவரின் ஆளுமை மற்றும் பேட்டிங் யுக்தி எந்த அளவிற்கு வெளிப்பட்டது எனவும் கமெண்ட் அடித்தனர்.
நாட்டின் மீதுள்ள கோபத்தால் திறமையை மூடி மறைக்க வேண்டாம் என்பது ரசிகர்களின் வெளிப்பாடாக இருக்கிறது.