மும்பைக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக விளையாடி முதல் ஐபிஎல் செஞ்சுரி அடித்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களாக குர்பாஸ்(8) மற்றும் ஜெகதீசன்(0) இருவரும் களமிறங்கினர். இருவருமே சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து மோசமான துவக்கம் கொடுத்தனர்.
அடுத்ததாக உள்ளே வந்த வெங்கடேஷ் ஐயர் ஒரு முனையில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். கேப்டன் நித்திஷ் ரானா 5 ரன்கள், தாக்கூர் 13 ரன்கள், ரிங்கு சிங் 18 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
இருப்பினும் நிறுத்தாமல் சிக்ஸர்களாக விளாசி வந்த வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்தார். அதன் பிறகு இன்னும் அதிரடியை வெளிப்படுத்தி இந்த சீசனின் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். ஐபிஎல் வரலாற்றில் வெங்கடேஷ் ஐயர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உட்பட 104 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
கடைசியில் ரசல் ஒரு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடித்து 11 பந்துகளில் 21 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றார். வெங்கடேஷ் ஐயர் மட்டுமே தனி ஆளாக நின்று அணிக்கு ரன் குவித்துக்கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் 200 ரன்களை எட்டும் வாய்ப்பை நழுவவிட்டது கொல்கத்தா அணி. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது.
வான்கடே மைதானத்தில் 200 ரன்களைக்கூட எளிதாக சேஸ் செய்யக்கூடிய அளவிற்கு முழுக்கமுழுக்க பேட்டிங் செய்ய சாதகமான பிட்சாக இருக்கும். இருப்பினும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் சிறந்த பார்மில் இருப்பதால், இந்த ஸ்கோரை கட்டுப்படுத்துவார்களா? அல்லது மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை கடந்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து காண்போம்.