இந்த தொடருடன் ஓய்வு பெறுவேன்.. அதிர்ச்சி கொடுத்த மூத்த வீரர்! கண்ணீரில் ரசிகர்கள்..!
இந்த போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன் என தனது முடிவை வெளியிட்டுள்ளார் தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் வெர்னான் பிளாண்டர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர். இவர் புதிய பந்தில் பெரும்பாலும் பந்துவீசி, ஸ்விங் செய்து துவக்க வீரர்களை எளிதாக ரன் எடுக்க விடாமல் திணறடிக்க கூடியவர்.
34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ல் தொடங்கி, ஜனவரி 28 அன்று நிறைவுபெறுகிறது. 2-வது டெஸ்ட் அவரது சொந்த மைதானமான கேப் டவுனில் நடக்கிறது. சொந்த மைதானத்தில் தனது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய திருப்தியோடு கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுசெய்வதாக முடிவெடுத்துள்ளார்.
கீழ் வரிசையில் நன்கு பேட்டிங் செய்யக்கூடிய பிளாண்டர், இக்கட்டான சூழலில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக, கிட்டத்தட்ட 12 வருடங்களாக விளையாடி வரும் பிளாண்டர், இதுவரை 60 டெஸ்டு போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 1619 ரன்கள் அடித்துள்ள இவர் 8 அரைசதங்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, முன்னர் போல வேகப்பந்துவீச்சு இல்லாமல் தவித்து வரும் தென்னாபிரிக்கா அணிக்கு மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஓய்வு பெறுவது பின்னடைவை தரக்கூடியதாக கருதப்படுகிறது.
இவரது இந்த ஓய்வு முடிவிற்கு ரசிகர்களும் பெரிதும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.