உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் எலைட் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தனது 3-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணிக்கு விக்கெட் கீப்பர் கார்த்திக் 87 ரன்களும், இந்தரஜித் 64 ரன்களும், கவுசிக் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி 295 ரன்கள் எடுத்தது.
பெங்கால் அணி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் அக்ஷ்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்கால் அணி வீரர்கள் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால், 39.1 ஓவரில் வெறும் 149 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்கால் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தமிழகம் சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், சித்தார்த், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தமிழக அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.