இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.. மீண்டும் அணிக்கு திரும்புகிறார்!
மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் ஷங்கர், காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் ரஞ்சிக்கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
சர்வதேச இந்திய அணிக்கு 4வது இடத்திற்க்காக பரிசோதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர். தமிழக அணிக்காக இந்த ஆண்டு விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போன்ற தொடர்களில் பங்கேற்றார்.
இரண்டிலும் கர்நாடகாவிடம் தமிழக அணி கோப்பையை இழந்து இரண்டாம் இடமே பிடித்தது. இந்நிலையில், ரஞ்சிக்கோப்பை செல்லும் தமிழக அணிக்கு முதல் முறையாக விஜய் ஷங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், காய்ச்சல் மற்றும் மணிக்கட்டில் உண்டான காயம் காரணமாக கடந்த ரஞ்சிப் போட்டியில் கேப்டன் விஜய் சங்கர் இடம் பெறவில்லை. தற்போது குணமடைந்து தமிழக அணியில் மீண்டும் இடம்பெறவுள்ளார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் விஜய் சங்கருக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த விஜய் சங்கர், உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

இதுவரை ரஞ்சிக்கோப்பையில் தமிழக அணி,
தமிழக அணி முதல் இரு ரஞ்சி ஆட்டங்களில் கர்நாடகா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. பிறகு மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து ஒரு புள்ளி மட்டும் பெற்றது.
இந்நிலையில், அடுத்து வரும் உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் தமிழக அணி இருக்கிறது. காயத்தில் இருந்து குணமடைந்து விஜய் சங்கர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.