விராட் கோலியையும் விட்டுவைக்காத இந்த 2020... மிகப்பெரிய சாதனையை பறிகொடுத்த கோஹ்லி! 1

2020 ஆம் ஆண்டு விராட் கோலி ஒருநாள் அரங்கில் மிகப்பெரிய சாதனையை தவறவிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரை இழக்க நேரிட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சதம் அடித்து வரும் விராட் கோலி இந்த 2020ஆம் ஆண்டு ஒருநாள் அரங்கில் இதுவரை ஒரு போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் மூன்றாவது ஒருநாள் போட்டி இந்த ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டி ஆகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் அடிக்க தவறிய விராட்கோலி மூன்றாவது போட்டியில் கட்டாயம் சதம் அடித்து ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். அப்பொழுதுதான் இந்த தொடர்ச்சியாக சதம் அடித்து வரும் சாதனையை தக்க வைக்க முடியும் என இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி நன்கு விளையாடிக் கொண்டிருக்கையில் துரதிஷ்டமாக 63 ரன்கள் எடுத்திருக்கையில் ஹெசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான சதத்தை விராத் கோலி அடிக்க தவறவிட்டார்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக தொடர்ந்து 16 வருடங்கள் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்திருக்கிறார். இந்த சாதனை தற்போது வரை முறியடிக்கப்படாமல் உள்ளது.

விராட் கோலி கடந்த மூன்று வருடங்களில் (2017, 18, 19) மட்டும் 17 சதங்கள் விளாசி இருக்கிறார். இப்படி இருக்கும் ஒருவர் இந்த வருடத்தில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டு பலருக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. இந்த வரிசையில் விராட்கோலியும் இருக்கிறார் என்றே கூறவேண்டும்.

தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் மட்டும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார். உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் விராட்கோலி இப்படி விளையாடியது சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறது.

மேலும் இதே ஆஸ்திரேலிய தொடரில் தான் விராட் கோலி சர்வதேச அரங்கில் அதிவேகமாக 22 ஆயிரம் ரன்களும், ஒருநாள் அரங்கில் அதிவிரைவாக 12 ஆயிரம் ரன்களையும் கடந்திருக்கிறார். இவர் இந்த 12 ஆயிரம் ரன்கள் சாதனையை 242 ஒருநாள் இன்னிங்ஸ்களில் பூர்த்தி செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *