பிசிசிஐயின் இந்த செயல் விராட் கோலிக்கு மனதளவில் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்திருக்கும் என்று பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் பேசியுள்ளார்.
ஒருநாள் தொடர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாகவே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 தொடர் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார், அதன்படியே உலகக் கோப்பை தொடருக்கு பின் டி20 தொடர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்தார், ஆனால் அதனை அடுத்த சில நாட்களிலேயே விராட் கோலி ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
விராட் கோலியை டி20 தொடர் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்றும், லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஒரு கேப்டன் செயல்பட்டால்தான் சிறப்பாக இருக்கும் என்பதால் விராட் கோலியை ஒருநாள் தொடர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை கேப்டன் ஆக்கினோம் என்றும் கங்குலி தெரிவித்திருந்த நிலையில், விராட் கோலி தான் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தான சரியான மற்றும் முறையான தகவல்களை எதுவும் தெரிவிக்கவில்லை, மேலும் கங்குலி டி20 தொடர் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று என்னிடம் ஒரு பொழுதும் கூறவில்லை என்று தெரிவித்தது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தையே புரட்டிப் போட்டது.
சுனில் கவாஸ்கர் போன்ற இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பிசிசிஐ மற்றும் சௌரவ் கங்குலி உடனே தலையிட்டு விராட் கோலி வைக்கும் குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கங்குலி நழுவி விட்டார்.
இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், விராட் கோலி ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கவலைப்படவில்லை, ஆனால் அவரிடம் அந்த விஷயத்தை சொன்னவிதம் அவரை மனதளவில் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும் நானும் தேர்வாளராக இருந்திருக்கிறேன்,தேர்வாளர்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் தேர்வு செய்த அந்த அறிக்கையை பிசிசிஐயின் தலைவரிடம் காட்டுவார்கள் அது சரியாக இருக்கும் பட்சத்தில் பிசிசிஐ தலைவர் கையெழுத்திட்டு அதை வெளியிடுவார். அதேபோன்றுதான் கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றாலும் இதே நடைமுறையை பயன்படுத்துவார்கள் ஆனால் அப்படி இவர்கள் எதுவுமே செய்யவில்லை. உங்களுக்கு விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தால் அது சம்பந்தமாக முறையாக விராட் கோலியிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கீர்த்தி ஆசாத் பிசிசிஐ கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.