டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோலி 6-வது இடத்தில் நீடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் டாப்-6 வரிசையில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (936 புள்ளி) முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் (889 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 3-வது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் 5-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் (806 புள்ளி) நீடிக்கிறார்கள்.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் லோகேஷ் ராகுல் 9-வது இடத்திலும், ரஹானே 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (896 புள்ளி) முதலிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா (884 புள்ளி) 2-வது இடமும், அஸ்வின் (852 புள்ளி) 3-வது இடமும் வகிக்கிறார்கள்.

அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி மகத்தான வெற்றியை தேடித்தந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்துக்கு மேலும் 37 பாயிண்டுகள் கிடைத்துள்ள போதிலும் தரவரிசையில் மாற்றம் இல்லை. அவர் (846 புள்ளி) 4-வது இடத்தில் தொடருகிறார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.