விராட் கோலி உலகிலேயே தலைசிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர் என புகழாரம் சூட்டியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்.
விராட் கோலிக்கு இந்த வருட ஐபிஎல் தொடர் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இருப்பினும் அணியை பிளே-ஆப் சுற்று வரை எடுத்துச் சென்றிருக்கிறார். பெங்களூரு அணியில் இம்முறை புதிதாக இணைந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், விராட் கோலி உடன் ஆடியது குறித்தும், அவரது கேப்டன் பொறுப்பு குறித்தும் சில அனுபவங்களைப் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் அவரது செயல்பாடு எந்த அளவிற்கு இருக்கும்; ஆஸ்திரேலிய அணிக்கு அவர் எந்த அளவிற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பது குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஆரோன் பின்ச் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை விராட்கோலி தலைசிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன். தனது கணக்கில் இன்றியமையாத அளவிற்கு சாதனைகளை வைத்திருக்கிறார். இனிவரும் காலங்களிலும் அவரது சில சாதனைகளை முறியடிக்கபடாமல் போகலாம். இத்தகைய தலைசிறந்த ஒரு வீரராக திகழ்ந்து வருபவர்.
ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கமாட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இவர் இருப்பார். இவருக்கென பிரத்தியேக திட்டங்களை வகுக்கும் அளவிற்கு அசாத்தியமான வீரர். பந்து வீச்சாளர்கள் இவருக்கு பந்துவீச சற்று திணறினாலும் எங்களுடைய திட்டத்திலிருந்து நாங்கள் விலகப் போவதில்லை. நிச்சயம் அவரை வீழ்த்த பல முயற்சிகளை எடுப்போம்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் இல்லாதது தனிப்பட்ட முறையில் வருத்தம் அளித்தாலும், அணிக்கு இது சாதகமாக அமையும் என நம்புகிறேன்.” என்று கூறினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி துவங்குகிறது.