மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் 50ஆவது அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார் விராட் கோலி. இதன் மூலம் புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
5ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
172 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வரும் ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்களாக டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரில் இருந்தே அபாரமாக விளையாடி வந்த இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கியது.
முதலில் டு பிளசிஸ் அரைசதம் அடித்தார். பின்னர் விராட் கோலி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 50ஆவது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் 50 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலிக்கு அடுத்து இடத்தில் ஷிக்கர் தவான் 49 அரைசதங்களுடன் இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்
1. விராட் கோலி – 50 அரைசதங்கள்
2. ஷிகர் தவான் – 49 அரைசதங்கள்
3. ரோகித் சர்மா – 41 அரைசதங்கள்
4. சுரேஷ் ரெய்னா – 40 அரைசதங்கள்
5.கௌதம் கம்பீர் – 36 அரைசதங்கள்
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இந்த பட்டியலில் 60 அரைசதங்கள் அடித்து அசைக்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக ஐபிஎல்-இல் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியல்
1. டேவிட் வார்னர் – 60 அரைசதங்கள்
2. விராட் கோலி – 50 அரைசதங்கள்
3. ஷிகர் தவான் – 49 அரைசதங்கள்
4. ஏபி டி வில்லியர்ஸ் – 43 அரைசதங்கள்
5. ரோகித் சர்மா – 41 அரைசதங்கள்