டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 1200 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார் விராட் கோலி.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. மூன்று நாட்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்திருந்தது. இந்தியா 289/3 என இருந்தது.
முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணிக்கு மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, சுப்மன் கில் 128 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். புஜாரா 42 ரன்கள், கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்கள் அடித்து அவுட்டாகினர். களத்தில் விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் இருந்தனர்.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் முதலே நிதானமான அணுகுமுறையுடன் விளையாடி வந்த விராட் கோலி மெல்லமெல்ல சதத்தை நெருங்கினார். அந்த தருணத்தில் ஜடேஜா துரதிஷ்டவசமாக 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து உள்ளே வந்த கேஎஸ் பரத் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இல்லாத அளவிற்கு கூடுதல் கவனத்துடன் பந்துகளை விளையாடினார்.
உணவு இடைவேளைக்கு பின்பு அதிரடியான அணுகுமுறையில் ஆரம்பித்த பரத், கேமரூன் கிரீன் பந்துவீச்சை இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். ஆனால் இவரால் முதல் அரைசகத்தை அடிக்க முடியவில்லை. 44 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் ஆடிவந்த விராட் கோலி, சுமார் 1205 நாட்களுக்குப் பிறகு, டெஸ்ட் அரங்கில் தனது 28வது சதத்தை அடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இவர் அடிக்கும் 75வது சதம் இதுவாகும்.
கடைசியாக நவம்பர் 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். அதன் பிறகு, 40 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சடிம் அடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக இருக்கிறது. ஏற்கனவே டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்தார். தற்போது டெஸ்ட் போட்டியிலும் சதத்தின் வறட்சியை நிவர்த்தி செய்து மீண்டும் சதம் அடித்திருக்கிறார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் அடித்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை விட 80 ரன்கள் பின்தங்கியுள்ளது.