சச்சின் டெண்டுல்கரின் 100 சதத்தை கோஹ்லி காலி செய்வார்; முன்னாள் வீரர் நம்பிக்கை
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 100 சதத்தை கோஹ்லி அசால்டாகி மிஞ்சிவிடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேபடன் தோனி கடந்த வருடம் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை துறந்ததை தொடர்ந்து, கேப்டன் பதவியேற்ற கோஹ்லி இந்திய அணியை வெற்றிப்பாதையில் கம்பீரமாக வழிநடத்தி வருவதோடு, ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சாதனைகளை அடுக்கி வருகிறார்.
இவரை கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு அனைவரும் புகழ்வது வழக்கம்.
சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக காலி செய்து வரும் கோஹ்லி, விரைவில் சச்சினின் 100 சதங்களையும் மிஞ்சி விடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோஹ்லி ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பதையே தனது வழக்கமாக வைத்துள்ளார். கோஹ்லி இதே வேகத்தில் போனால் எந்த சாதனையும் கோஹ்லியிடம் இருந்து தப்பிக்காது. கோஹ்லியை நான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடவில்லை, ஆனால் கோஹ்லியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்றே தோன்றுகிறது. ஒருவரின் சாதனையை மற்றொருவர் முறியடிப்பது இயல்பு தான், அது தான் சாதனையும் கூட என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து பேசிய விஸ்வநாத், இது இந்திய அணியில் நடைபெற்று வரும் ஆரோக்கியமான போட்டி. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் இளம் வீரர்களும் தங்களது கடமையை சரியாக செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.