கடந்த முறை ஒயிட்வாஷ் செய்து விட்டோம் என்பதற்காக இலங்கை அணியை லேசாக எடைபோட்டு அணுக மாட்டோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று (16-11-17) முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது:
ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது, ஒவ்வொரு தொடரும் பெரிதே. இந்தத் தொடரை இழந்தால் பரவாயில்லை என்று நீங்கள் பேசாமல் இருந்து விடுவீர்களா? எனவே நாட்டுக்காக ஆடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை, ஒரு அணியாக சிறப்பாக ஆடுவதே விருப்பம்.
என்ன சூழ்நிலையாக இருந்தாலும் எந்த அணிச்சேர்க்கைத் தேவை என்றாலும் அதற்கேற்பவே செயல்படுவோம். வெற்றி பெறுவதுதான் முக்கியம் அது இந்தியாவில் ஆடினாலும் சரி, அயல்நாட்டில் ஆடினாலும் சரி.
எதிரணியினர் யாராக இருந்தாலும் எங்கள் ஆட்டத்தை சீரான முறையில் ஆடுவதையே விரும்புகிறோம். ஒரு அணியாக நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவே விரும்புகிறோம். மோசமாக ஆடிவிட்டு அதிலிருந்து சுலபமாக இந்தியாவில் தப்பித்து விட முடியாது. விளையாட்டை மதித்து நம்மிடம் உள்ள திறமைகளை ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மாறி மாறி ஆடினாலும் இதுவரை சமனிலையை சரியாகப் பராமரித்து வருகிறோம். இப்போது டெஸ்ட் போட்டி முதல் ஆட்டத்தில் உத்வேகம் பெற வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவது அருமையாக உள்ளது. ஏனெனில் இதில் சவால்கள் வித்தியாசமானவை, நாங்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறினர் விராட் கோலி.
இலங்கை அணியையே தொடர்ந்து எதிர்கொண்டு ஆடிவருவது ரசிகர்களுக்கு சலிப்பூட்டுவதாக அமையாதா என்பது குறித்து விராட், “எனக்கு அது தெரியாது, இந்த ஆய்வை ரசிகர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். ஆட்டத்தை விளையாடுபவர்களை விட ஆட்டத்தைப் பார்ப்பவர்கள் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் ஆட மாட்டோம், இந்தப் போட்டியில் ஆடமாட்டோம் என்றெல்லாம் கூறுவதற்கில்லை. என்னப் போட்டியாக இருந்தாலும் நாங்கள் எங்கள் தீவிரத்தின் உச்சத்தில் இருப்போம். ரசிகர்கள்தான் இந்தக் கேள்விக்கு சரியாக விடை அளிக்க முடியும்.
அதிகமாக கிரிக்கெட் ஆடுகிறோமா, அல்லது ஒரே அணியுடன் மீண்டும் மீண்டும் ஆடுகிறோமா என்பது பற்றி நாங்கள் கூறுவதற்கொன்றுமில்லை. எங்களுக்கு என்ன அளிக்கப்படுகிறதோ அதில் நாட்டுக்காக ஆட வேண்டியதுதான்.
ஆனால் இந்த விஷயத்தை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் ரசிகர்கள் ஆட்டத்தை விட்டு விலகிச் சென்று விடக்க்கூடாது அல்லவா. ரசிகர்களை எப்படி உற்சாகம் குன்றாமல் வைத்திருக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், என்றார் விராட் கோலி.