விராத் கோலி எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமையும் என கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
அனைவரும் எதிர்பார்த்து வரும் ஆஸ்திரேலியா – இந்தியா இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் 27ஆம் தேதி துவங்குகிறது. இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லிமிடெட் ஒவர் போட்டிகளில் விளையாடிய பிறகு டிசம்பர் 17ஆம் தேதி டெஸ்ட் போட்டிகள் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியை விராட் கோலி விளையாடிய பிறகு, மீதமுள்ள 3 போட்டிகளில் விடுப்பு எடுத்துள்ளார்.
விராட் கோலி அனுஷ்கா தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால், அந்த சமயத்தில் அனுஷ்கா சர்மாவுடன் இருப்பதற்காக விராட் கோலி இந்தியா திரும்புகிறார். ஆகையால் 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி மட்டுமே அவர் விளையாடுவார். மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட போவதில்லை.
இந்த சம்பவம் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.
“கோஹ்லி ஆஸ்திரேலிய மண்ணில் அசைக்கமுடியாத ரெக்கார்டு வைத்திருக்கிறார். 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்களை ஆஸ்திரேலிய மண்ணில் விளாசி இருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. விராட் கோலி இல்லாதது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெருத்த நிம்மதியாக இருக்கும். இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக அமையும்.
போட்டி துவங்கும் முன்னரே ஆஸ்திரேலிய அணி பலம் மிக்கதாக காணப்படும். கோஹ்லி எடுத்த முடிவு சரியா இருக்குமா? இல்லையா? என்பது பின்னர்தான் தெரியவரும். ஆனால் என்னை பொறுத்தவரை இது சரியானது இல்லை என்றே கூறுவேன்.” என கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை முன் வைத்திருந்தார்.