புஜாரா குறித்து நக்கலாக ட்வீட் போட்ட விரேந்திர சேவாக்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புஜாரா விளையாடுவது குறித்து சேவாக் நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் 194 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது இந்திய அணி. விராட் கோலி தவிர ஒரு பேட்ஸ்மேனும் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. குறிப்பாக புஜாரா, ரகானே, தினேஷ் கார்த்திக் சொதப்பினர்.
இதனிடையே, முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து அணி அடுத்த போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இரண்டு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சரியாக விளையாடாத டேவிட் மாலனை தூக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஆலி போப் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை, இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக பென்ஸ் ஸ்டோக்ஸும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு அதிரடியான முடிவுகளை இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் எடுத்துள்ளார்.
இதனிடையே, இந்திய அணியிலும் இதேபோல் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக சரியாக விளையாடாத புஜாரா நீக்கப்படுவார் என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில், புஜாரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து சேவாக் ஒரு ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து அணி அதிரடியான மாற்றம் செய்துள்ள நிலையில், புஜாரா விளையாடணுமா என்று நக்கலாக கிண்டல் செய்துள்ளார்.
சேவாக் தனது ட்விட்டில், “போப் இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறார், புஜாராவை இரண்டாவது டெஸ்டில் விளையாட வைக்க வேண்டுமா? அதுமட்டுமில்லாமல், அது லாட்ஸ் மைதானம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்களின் மனநிலையை மாற்றி பயமின்றி விளையாட செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுறுத்தி இருந்தார். ‘டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் அடித்தாலும், மற்றவர்களும் ரன் அடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரன் அடித்தால்தான் வெற்றி பெறமுடியும்’ என்று கூறினார் கங்குலி.