வர்ணனையாளர் தோனியிடம் ஓய்வு முடிவு பற்றி கேட்டதற்கும், அதற்கு தோனி பதில் கூறியதற்கும் காட்டுமான விமர்சனத்தை முன்வைத்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடவில்லை. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பின்னர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த தோனியிடம் நிருபர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஒவ்வொரு வருடமும் எப்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவீர்கள்? என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு தோனியும் தனக்கே உரிய பாணியில் லாவகமாக பதில் கூறி வந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசன் என்று பலரும் பேசி வருகின்றனர். தோனியும் ஆங்காங்கே அது உண்மைதான் என்பதுபோலவும், இல்லை என்றும் பல்வேறு விதமான பதில் கூறி வருகிறார்.
நேற்றைய தினம் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின்போது, முன்னாள் வீரசர் மற்றும் வர்ணனையாளர் டேனி மாரிசன், உங்களுக்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். உங்களுடைய கடைசி சீசனை என்ஜாய் செய்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
“இதுதான் கடைசி சீசன் என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்களா?” என்று சிரித்தபடியே பதில் கூறிவிட்டு நகர்ந்தார் தோனி. அதன்பிறகு வர்ணனையாளர் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம், “தோனி மீண்டும் அடுத்த வருடம் வருகிறார். கேட்டுக் கொள்ளுங்கள்.” என்றும் அறிவித்தார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் தோனி ஓய்வு முடிவு குறித்து பேசியதும், தோனியிடம் ஒவ்வொரு வருடமும் ஓய்வு முடிவு குறித்து கேள்வி எழுப்புவதும் பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து பேசியுள்ளார் விரேந்திர சேவாக் அவர் கூறியதாவது:
“ஏன் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள்? இது எனக்கு சுத்தமாக புரியவில்லை!. இது அவரது கடைசி வருடமாகவே இருந்தாலும், இந்த கேள்வியை எதற்காக கேட்க வேண்டும்? தோனி தன் வாயால் இதுதான் கடைசி வருடம் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு தொடர்ந்து கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அப்படி இது கடைசி வருடம் என்று இருந்தால், அவராகவே அந்த முடிவை எடுத்து அறிவிக்கட்டும். நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பது சரியல்ல.” என்றார்.