இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் தொடர் குறித்த ரசல் அர்னால்ட் தனது கணிப்பை தெரிவித்து இருந்தார். இலங்கையை சேர்ந்த கமெண்டரி செய்யும் நபரான இவர் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார். இவரது கணிப்பை இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷமன் மிகவும் காமெடியாக கலாய்த்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். இவரை ஏற்கனவே இந்திய வீரர் அஸ்வின் டிவிட்டரில் கலாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி இந்தியாவுக்கு டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்துள்ளது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. முதல் போட்டி டிசம்பர் 10ம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தில் நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ரசல் அர்னால்ட் கமெண்டரி செய்யும் போது குறிப்பிட்டு இருந்தார். அதோடு நிற்காமல் டிவிட்டரில் அதை எழுதினார். ஆனால் டிவிட்டரில் தவறுதலாக ”டெஸ்ட் தொடர் 1-0 என்று முடிந்துவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன் நடந்தது போல ஒருநாள் தொடரும் 5-0 என்று முடியாது” என்று கூறியிருந்தார். மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளே நடக்க இருக்கும் நிலையில் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து ரசல் அர்னால்ட் செய்த இந்த டிவிட்டை வைத்து விவிஎஸ் லக்ஷ்மன் அவரை கலாய்த்தார். அதில் ”ஆமாம் இலங்கை 5-0 என்றெல்லாம் தோற்காது, ஏனென்றால் மொத்தமாக மூன்று போட்டிதான் நடக்கும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.